புதுடில்லி: வரும் 2026 ஏப்ரல் முதல் 2027 பிப்ரவரி வரை இரு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பார்லியில் லோக்சபா காங்கிரஸ் எம்.பி., ராகுல் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கையில் இதை தெரிவித்துள்ளார். அவர் தமது பதிலில் மேலும் கூறி உள்ளதாவது;
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது 2 கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு 2026ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் நடத்தப்படும். இதில் வீடுகளின் பட்டியல் கணக்கெடுக்கப்படும்.
இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இது பிப்.2027ல் நடைபெறும். ஏப்.30ல் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் முடிவு செய்யப்பட்டவாறு, 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதி கணக்கெடுப்பும் எடுக்கப்படும்.
இவ்வாறு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments