ADS

நீதிபதி சந்துரு அறிக்கையை ஏற்க முடியாது: அண்ணாமலை

சென்னை : பள்ளிகளில் ஜாதிக்கு கடிவாளம் போட வேண்டும் என்பது உண்மை தான் . ஆனால் நீதிபதி சந்துரு அறிக்கையை ஏற்க முடியாது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



தமிழக பா.ஜ.,வின் மையக்குழு கூட்டத்திற்கு பிறகு அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வை பொறுத்தவரை 2024ம் ஆண்டு தமிழகத்திற்கு சிறப்பான ஆண்டு. நீட் தேர்வில் யார் குளறுபடி செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வில் தவறு இல்லை. தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது தான் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த அமைப்பு பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. தேசிய தேர்வு முகமையை மறு ஆய்வு செய்யப் போவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். நீட் குளறுபடி குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டு தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கம் அதிகரித்து உள்ளது. தனது பணியை மேற்கொள்ளாத அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். தமிழகத்தில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. அரசு அதிகாரிகள் மீது மணல் கடத்தல் கும்பல் தாக்குதல் நடத்துகின்றனர். தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை இல்லை. வி.ஏ.ஓ.,க்கள் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு பெறும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு உள்ளது.

பள்ளிகளில் ஜாதிக்கு கடிவாளம் போட வேண்டும் என்பது உண்மை தான் . ஆனால் சந்துரு அறிக்கையை ஏற்க முடியாது. அந்த அறிக்கையில் ஏற்றுக் கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்தினால், பள்ளி கல்லூரிகளில் மேலும் ஜாதி ரீதியிலான பிரச்னைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. கள்ளர், ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிகல்வித்துறையின் கீழ் கொணடு வரக்கூடாது. ஆசிரியர்களை ஜாதி பார்த்து தேர்வு செய்து ஜாதி பார்த்து வேலை வழங்குவதை ஏற்க முடியாது. அகர வரிசைப்படி மாணவர்கள் அமர வேண்டும் என்ற அறிவுறுத்தல் எப்படி சரியாக இருக்க முடியும்.

ஆக்கப்பூர்வமாக முடிவு எடுக்காமல் கையில் கயிறு கட்டி விபூதி குங்குமத்தை வைத்து அடையாளப்படுத்துவது சரியல்ல. பள்ளிகளில் தேர்தல் நடத்தினால் ஜாதி அரசியல் தான் அதிகரிக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Post a Comment

0 Comments