ADS

அரசு அலுவலகமா? கட்சி அலுவலகமா? மதுரை திமுக MLA தளபதி மீது பாயும் பாஜக!

மதுரை: மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய திமுக எம்.எல்.ஏ. கோ.தளபதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பாஜக புகார் கொடுத்துள்ளது



மக்கள் பயன்பாட்டுக்கான அரசு பொது அலுவலகத்தில் திமுக உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம் செய்து வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது.அரசு அலுவலகத்தை கட்சி அலுவலகமாக தளபதி எம்.எல்.ஏ. கருதிவிட்டாரோ என மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் விமர்சித்திருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல்:

 தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திமுக விருப்பமனு விநியோகத்தை தொடங்கிவிட்டது. அந்த வகையில் மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என திமுக மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கோ.தளபதி அறிவித்திருந்தார்.

தளபதி எம்.எல்.ஏ. 

இவரது இந்த அறிவிப்பு உள்ளூர் நாளிதழ்களிலும் செய்தியாக வெளிவந்திருந்தது. இதையடுத்து இந்த விவகாரத்தை கையில் எடுத்த மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், தளபதி எம்.எல்.ஏ. மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததோடு தேர்தல் விதிமுறைக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். திமுக எம்.எல்.ஏ. மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்

மாவட்ட நிர்வாகம் 
வலையில் தானாக சிக்கிய மீனை போல் இந்த விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ. தளபதி பாஜகவிடம் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் ஏற்கனவே திமுகவில் இருந்ததால் அப்போதே அவருக்கும் தளபதி எம்.எல்.ஏ.வுக்கும் ஏழாம் பொருத்தம் என்றும் இதனால் இந்த விவகாரத்தை சரவணன் எளிதில் விடமாட்டார் எனவும் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அண்ணாமலையின் ஒப்புதலோடு நீதிமன்றத்தை நாடவும் சரவணன் முடிவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments