வேணிதானம்:
தமிழ்நாட்டில், பெண்கள், 'பூ முடி' கொடுப்பது என்று ஒரு வழக்கம் உண்டு. பொதுவாக, நம் பாரம்பரியத்தில், பெண்கள் முடியிறக்குவது கிடையாது. அதற்குப் பதிலாக, நீண்ட தலைப்பின்னல் பின்னி, (ஆனால் தற்போது தலைவிரி கோலம் தான் என்பது வருத்தமான விஷயம்) பின்னலில் பூ சுற்றி, பின்னல் நுனியில் கொஞ்சம் கத்தரித்து, இறைவனுக்குச் சமர்ப்பிப்பார்கள்.
இதுவே பிரயாகை திரிவேணி சங்கமத்தில், 'வேணிதானம்' என்று சொல்லப்படுகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடம் தான் திரிவேணி சங்கமம். இதில் கங்கையும் யமுனையும் இரு வேறு வண்ணங்களில் தெரிய, சரஸ்வதி மட்டும் கண்ணுக்குத் தெரிவதில்லை. கண்ணுக்குத் தெரியாமல் கலக்கிறாள் சரஸ்வதி.
மனைவி தன் கணவரை மாதவனாகக் கருதி பூஜை செய்து ”கல்யாணம் ஆனது முதல் இதுவரை தான் தன் கணவருக்கு ஏதேனும் தவறு செய்திருந்தால் அதை மன்னிக்கும்படி கேட்க, கணவன் மன்னித்து மனைவியை த்ரிவேணியாக கருதி பூஜிக்க வேண்டும்.
"தற்காத்து, தற்கொண்டாற் பேணி, தகை சான்ற
சொற்காத்து, சோர்வு இலாள் பெண்."
-திருக்குறள்.
அன்பும், பண்பும் சேர்ந்து பெண்ணும், ஆணும் இல்லறக் கடமைகளை ஆற்றும்போது அங்கே இனிமை பெருகும். இணக்கம் மலரும். ஒருவரை ஒருவர் சார்ந்த இயற்கை வாழ்வு மலர்ந்து பரிமளிக்கும். நன் மக்கள் பிறப்பும், ஒழுக்கமான வளர்ப்பும் நிகழும்.
கணவன் இல்லறத்துக்குத் தேவையான பொருள் சம்பாதிப்பதில் கவனத்தையும், குடும்ப நலனின் அக்கறையும், வெளி விவகாரங்களில் அக்கறையும் காட்ட, மனைவி குடும்ப உள் விவகாரங்களிலும், குழந்தை வளர்ப்பிலும், குடும்பத்தினரின் உடல் நலத்திலும் அன்றாடப் பணிகளிலும் கவனத்துடன் இருக்க, குடும்ப வாழ்வு செழிக்கும்.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல், ஒருவர் மற்றவர் பணியைக் குறைக்க உதவிக் கொள்ளுதல் என்பவை அன்பின் அடிப்படையில் நிகழ்ந்தால் இல்லறம் மிகவும் இனிமையுடன் விளங்கும். அன்பு என்பதே குடும்பத்தில் அனைவரையும் இணைக்கும் பாலமாகும்.
ஆனால் நற்பண்பற்ற மனைவியின் நடத்தை என்பது கற்புக் களங்கம் மட்டுமல்ல. கணவனை துன்புறுத்துவதும், அவனது செயல்களுக்கு ஒத்துழையாமல் இருப்பதும், இணக்கமற்று கண்டதே காட்சி கொண்டதே கோலம் என இருப்பதும், கொடுமைப் படுத்துவதும், பெண்ணுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இல்லாமல் திகழ்வதும், இல்லத்தைப் பிரிப்பதும், கணவனையும் அனைவரையும் அதிகாரம் செய்து திகழ்வதும், இல்லத்தில் தன் விருப்பப்படியே அனைவரும் நடக்க வேண்டும் என்பதும், இன்னும் இதுபோல பலவும் கெட்ட குணச் செயல்களாகும்.
அதேசமயம் கணவனும் மனைவியிடம் இணைந்து குடும்ப நலம் பேணுதல் வேண்டும். வாழ்க்கைத் துணை நலம்
பேணுதல் இருவருக்கும் பொதுவானது. இல்லாவிடில் வாழ்க்கை கோணலாகிவிடும். இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழும் போது அந்த குடும்பம் பல்கலைக்கழகமாக, கோயிலாக திகழும்.
இதுவே வேணிதானம் செய்வதன் தாத்பர்யம்.
வேணிதானத்தின் போது கணவன் மனைவியை தன் மடி மீது அல்லது முன்னர் அமர்த்திக் கொண்டு மனைவிக்கு தலை வாரி, பின்னல் போட்டு புஷ்பம் வைத்து தலை முடியின் நுனியில் இரண்டு அங்குலம் கத்திரித்து மஞ்சள்,குங்குமம், அக்ஷதை, சந்தனம், காதோலை கருகமணி, வெற்றிலை பாக்கு இவைகளுடன் வைத்து மனைவியிடம் கொடுக்க மனைவி அதனை பண்டாவிடம் சமர்பிப்பார். பண்டா அதை கங்கையில் போடுவார். வெற்றிலை மாத்திரம் மிதந்து சென்று விடும். முடி மேலே மிதக்காமல் உள்ளே சென்று விடும்.
த்ரிவேணிக்கு மூங்கில் (வேணு) தானம் செய்தால் ப்ரியம். எனவே சிறிய முறத்தில் சீப்பு கண்ணாடி. குங்குமச் சிமிழ்; மஞ்சள் பொடி; அரிசி; வெற்றிலை; பாக்கு பழம்; ரவிக்கை; தக்ஷிணை இவைகளை வைத்து மற்றொரு முறத்தால் மூடி தானம் செய்ய வேண்டும்.
தலைமுடியை பின்னல் போடும்போது மூன்று கால்கள் எடுத்து பின்னல் போட்டாலும், பின்னி முடித்த பிறகு பார்த்தால், இரண்டு கால்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும் . மூன்றாவது கால் மறைந்தே இருக்கும். அதே போலவே தான் இங்கே கங்கையும் யமுனையும் கண்ணுக்குத் தெரிய, சரஸ்வதி தெரிவதில்லை.
கணவனுடன் நீடித்த மணவாழ்வு மற்றும் எத்தனை பிறவி எடுத்தாலும் அதே கணவன்/மனைவியையே வாழ்க்கைத் துணையாக அடையும் பொருட்டும் வேணிதானம் செய்யப்படுகிறது
இல்லறத்தில் மங்கலம் என்பது மனையின் மாண்பே.
"மங்கலம் என்ப மனைமாட்சி"
அதாவது இல்லத்திற்குப் பெருமை ஒழுக்கமுடைய இல்லத்தவரும், இல்லாளும் இணைந்து இனிதே நடத்தும் வாழ்க்கை ஆகும். இத்தகைய சிறப்பான இல்லற வாழ்வானது தெய்வ நிலையையும் தரும் வல்லமை கொண்டது.

0 Comments