ADS

தமிழக சிறுபான்மை ஆணையத்தில், எங்களுக்கு இடமில்லையா?? கொந்தளிக்கும் தமிழ் சமணர்கள்

தமிழக சிறுபான்மை ஆணையத்தில், எங்களுக்கு இடமில்லையா' என கேட்டு, அரசுக்கு எதிராக கொந்தளிக்கிறது, சமணர்கள் சமூகம். தமிழ் ஜெயின்கள்' என, அழைக்கப்படும் சமணர்கள் சார்பாக, சமண பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபுகாந்தி ஜெயின், இதுதொடர்பாக, அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.



அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் வாழும் ஜெயின் சமூகத்தினரை, தமிழ் ஜெயின், வட மாநில ஜெயின் என, பிரிக்கலாம். இதில், வட மாநில ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள், லட்சக்கணக்கில் இருப்பர். இவர்கள், வட மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி, தமிழகம் வந்தவர்கள். ஆனால், தமிழ் ஜெயினர்கள் என்பவர்கள், தமிழத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். அதாவது,- சமணர்கள்.இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், தமிழகத்தில், 50 ஆயிரம் பேர் தான் இருப்பர். அதனால், இங்கு சிறுபான்மை சமூகம் தான்.கிறிஸ்தவம், இஸ்லாமியம், பார்சி, சிந்து, சீக்கிய சமூகம் உள்ளிட்ட சிறுபான்மை சமூக பட்டியலில், எங்களையும் சேர்த்துள்ளனர்.


பல நுாறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய, தமிழ் சமணர் சமூகம், தங்களுக்கென்று தனித்த அடையாளம் கொண்டுள்ளது. தமிழில், ஐம்பெரும் காப்பியங்களை படைத்தவர்களில் பெரும்பாலானோர், சமணர்கள் தான். திருத்தக்க தேவர், இளங்கோவடிகள், சீத்தலை சாத்தனார் உள்ளிட்ட, ஐம்பெரும் இலக்கிய முன்னோடிகள் பலரும் சமணர்களே.சமணர் கோவில்கள், ராமநாதபுரம், சிவகங்கை, ராமேஸ்வரம், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலையில் உள்ளன. 'சமணர்களின் இலக்கணம் இல்லா இலக்கியம், தமிழ் இலக்கியத்தின் வெற்றிடம்' என்றே, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தளவுக்கு தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளாக, இச்சமூகத்தவர் இருந்துள்ளனர். மேல் சித்தாமூர், திருமலை என, இரு சமண மடங்கள், தமிழகத்தில் பிரதான சமண மடங்கள். சமணர்களுக்கென்று இருக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றால், சிறுபான்மை ஆணையத்தில் உறுப்பினராகும் வாய்ப்பை, அரசு அளிக்க வேண்டும். ஜெயின் சமூகத்தை சேர்ந்த வட மாநிலத்தவர்கள் பிரவீன் தாட்டியா, பியாரிலால் ஆகியோர், சிறுபான்மை ஆணைய உறுப்பினராக உள்ளனர்.இவர்கள், தமிழ் சமணர்கள் அல்ல. அதனால், கடந்த ஆட்சியில், அஜித் பிரகாஷ் ஜெயின் என்ற, சமணர் நியமிக்கப்பட்டது போல, இப்போதும் சமணர் ஒருவரை, சிறுபான்மை ஆணைய உறுப்பினராக நியமிக்க வேண்டும். இவ்வாறு, பிரபுகாந்தி ஜெயின் கூறினர்.

Post a Comment

0 Comments